வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ஊர்களுக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது ஏலகிரி. பறந்து விரிந்த புங்கனூர் அருவியில் படகு சவாரி செய்யலாம். கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு பாரா கிளைடிங், மலை ஏற்ற வசதிகளும் இருக்கிறது. தரமான தங்கும் விடுதிகளும் உள்ளன.
தமிழ்நாட்டின் சுற்றுலா கோடை வாசஸ்தலங்களில் ஒன்று ஏலகிரி. இந்த மலையில் ஆண்டு முழுவதும் மிதமான குளிர்ச்சியுடன் கூடிய தட்பவெப்பநிலை நிலவுகிறது. வேலூரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்களில் சென்று பொன்னேரியில் இறங்க வேண்டும். அங்கிருந்து இருந்து 14 வளைவு பாதைகளை கடந்தால் ஏலகிரி. ஏலகிரிமலை 29.2 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடைக்காலத்தில் 34 டிகிரியும், குளிர்காலத்தில் 11 டிகிரி வெப்பநிலையும் காணப்படுகிறது.
புங்கனூர் ஏரி படகு குழாம், குழந்தைகள் பூங்கா, முருகன் கோயில், அத்தனாவூர் மற்றும் நிலாவூரில் உள்ள அரசு பழத்தோட்டம், அரசு மூலிகைப் பண்ணை, டெலஸ்கோப் கருவி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மங்களம் ஏரி, மலை மீது அமைந்திருக்கும் நீண்ட நடைப்பாதை, நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியம்மன் கோயில், பரண் பார்வை மையம் போன்றவை இங்கு காண வேண்டிய இடங்கள். புங்கனூர் ஏரி, மலையின் நடுவில் 56.7 சதுர மீட்டர் பரப்பில் உள்ளது. இங்கு படகு சவாரி செய்யலாம். தமிழக அரசு வனத்துறை சார்பில் புங்கனூர் ஏரி அருகே மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்கு பயன்படும் அரிய மூலிகைகள் பயிரிடப்படுகிறது. புங்கனூர் ஏரியை அடுத்து 6 ஏக்கர் பரப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஏலகிரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் வழியாக மலையின் எழிலையும், மலைச்சரிவு மற்றும் பள்ளத்தாக்குகளையும் காண முடியும். தென்இந்தியாவிலேயே ஏலகிரி மலையில்தான் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர இசை நீரூற்று, மலர் பூங்கா என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.